கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் ஊரடங்கை இன்னும் கடுமையாக்க தமிழக அரசு முடிவுசெய்து, ஆலோசனை செய்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த பாதிப்பாளர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதல், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பெற அனுமதிக்காமல் ஒரு கிராமமே தடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாதகடப்பா என்கிற மலை கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒருவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அது கட்டுப்படாததால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கே கரோனா உள்ளதா என கண்டறிய பி.சி.ஆர் டெஸ்ட் செய்துள்ளனர். டெஸ்ட் தந்துவிட்டு ஊருக்கு வந்துள்ளார் அந்த நபர்.
இரண்டு தினங்களில் அந்த நபருக்கு கரோனா என்பது உறுதியானது. அவரை சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்க முயன்றுள்ளனர். இந்த தகவல் தெரிந்து அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். அந்த நபரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என மே 13ஆம் தேதி அழைத்துள்ளனர். அப்படி அழைத்த சுகாதாரத்துறையினரையும், தூய்மைப் பணியாளர்களையும் கடுமையான சொற்களில் வசைபாடியுள்ளனர்.
“இது சாதாரண காய்ச்சல்தான், இது தானாக சரியாகிடும். நீங்க மருத்துவம் பார்க்கறன்னு அவரை கூப்பிட்டுக்கிட்டுப்போய் சாகடிக்கப் பார்க்கறிங்களா? எங்களையும் கூப்பிடறிங்க, நாங்க நல்லாத்தானே இருக்கோம்” என கேள்வி எழுப்பி பரிசோதனை செய்துகொள்ள மறுத்துள்ளனர். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் காவல்துறையினர் வந்து சமாதானம் பேசியும், அந்த மலைகிராம மக்கள் அசைந்து கொடுக்கவில்லை.
இதனால் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் திரும்பிய சுகாதாரத்துறையினர், அந்த ஊருக்குச் செல்லும் சாலையில் ஊருக்கு வெளியே இது தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் என பேனர் கட்டியதோடு, வெளியாள் யாரும் ஊருக்குள் செல்லாதபடி சவுக்கு போட்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.