விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ளது தைலாபுரம். இந்தக் கிராமத்தின் நிர்வாக அலுவலராக உள்ளவர் ராஜி. இதே பகுதியைச் சேர்ந்தவர் உத்தர குமார். இவருடைய தந்தை ஏழுமலை வேறு ஒரு நபரிடமிருந்து கிரையம் பெற்ற நிலத்தை அவரது தந்தை பெயருக்கு பட்டா மாற்றம் செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜி பட்டா மாற்றம் செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருவதாக உறுதி கூறியுள்ளார்.
முறைப்படி கிரையம் பெற்ற தங்கள் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டியது வருவாய்த்துறையினர் கடமை. அப்படியிருக்கும்போது லஞ்சமாக இருபதாயிரம் கேட்டதால் கோபமடைந்த உத்தர குமார் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று உத்தர குமார் கிராம நிர்வாக அலுவலரிடம் அவரது அலுவலகத்தில் 20 ஆயிரம் ரூபாய் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை கொடுக்க சென்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
கிராம மக்களிடம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் லஞ்சமாக பணம் கேட்டு அவர்களிடம் கறாராக பணம் வசூலிப்பது தொடர்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர் வாரிசு சான்று பெற பரிந்துரை செய்வதற்காக லஞ்சமாக பணம் பெற்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தபரபரப்பு அடங்குவதற்குள் கிராம நிர்வாக அலுவலர் ராஜி லஞ்சம் பெரும் போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.