Skip to main content

முல்லைப் பெரியாறு தொடர்பாகத் தொடர்ந்து அவதூறு கருத்து - கேரள நடிகர்களுக்கு "ரெட் கார்டு" கேட்கும் வேல்முருகன்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

cvb


இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "  கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தைப் பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களைத் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்திற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அம்மாவட்டங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றப்படுகிறது. 1970 ஆம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 140 மெகா வாட் மின்சாரத்தை தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்து வருகிறது. இச்சூழலில், கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், ஜோஜூ ஜார்ஜ், உன்னி முகுந்தன், சில அரசியல் கட்சிகள் இணையத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தின் வாயிலாக, முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக விஷம பிரச்சாரம் கட்டவிழ்க்க முயற்சி செய்யப்பட்டது. பின்னர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள், மக்கள் போராட்டங்கள் மூலம், அப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.  முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை பலமாக இருப்பதாக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு கூறியிருந்தாலும், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதில், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் மற்றும் இன்னும் பிற கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.  வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிகவும் வேதனைக்குரியது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் தயாராக இருக்கின்றனர். ஆனால், கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று மலையாள நடிகர்கள், சில அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வது நியாயமா?. முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை என்று மத்திய நீரியல் நிபுணர் குழு சொன்ன பிறகும், பிடிவாதமாக பொய்யான காரணங்களை கற்பித்து அணைக்கு ஆபத்து என்று கூறி உடைக்க வேண்டும் என்பது கண்டனத்துக்குரியது. இந்த அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் பறிபோகும்.

 

உணவுக்கு, பிழைப்புக்கு, வர்த்தகத்துக்கு என பல வழிகளிலும் சரி பாதி தமிழகத்தை மட்டுமே நம்பியுள்ள கேரளா, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.  எனவே, கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.  மேலும், கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் உதவி செய்வதோடு, அம்மாநிலத்தில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரளா அரசுக்கு, தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

tvk Party leader Velmurugan arrested

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் நேற்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

 

இதற்கிடையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12 ஆயிரத்து 500 கன அடி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் காவிரி நதி நீர் பங்கீட்டைத் தர மறுத்து கர்நாடக அரசே பந்த் அறிவித்தது. கன்னட கும்பல்களைத் தூண்டி விட்டு, தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயலை கர்நாடக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தாலும், பாஜக அரசு இருந்தாலும் தமிழர்களை வஞ்சிக்கிறது. தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது. இவ்வாறு துரோகம் செய்கிற கர்நாடக அரசிற்கு, மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும்” எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

பிரதமருக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி காட்டும் போராட்டம் (படங்கள்)

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், என்எல்சி (NLC) நிறுவன விரிவாக்கம், வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய தனியார் சுரங்கங்களுக்கு அனுமதி என அடுக்கடுக்காக நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி தமிழ்நாட்டின் விவசாயத்தை முற்றாக அழித்து பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து இன்று (08-04-2023) தமிழ்நாடு வருகையின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.