Skip to main content

’அரசியல் வேண்டாம் என்று என் தாய் என்னிடம் கண்ணீருடன் பேசுவது மனசை உலுக்குகிறது’ -மனம் திறந்த வேல்முருகன் 

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.   இந்நிலையில் குடல் பிரச்சனையினால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார்.

 

v

 

அப்போது அவர், ‘’நான் எந்த கூட்டணியிலும் இடம்பெறவில்லை.  தேர்தலை குறித்து இப்போதைக்கு நான் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. தேர்தலை பற்றி நான் கவலைப்படவில்லை.  எனக்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றதும் என்னை அழைத்தால், மருத்துவக்குழு சம்மதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிடுவதா? இல்லை எங்களை மதித்து  வருவோருக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து எங்கள் கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.

 

  என் வீட்டிற்கு வந்தும், மருத்துவமனைக்கு வந்தும் கூட்டணிக்கு வாருங்கள் என்று பல்வேறு கட்சிகள் அழைத்தன.  டிடிவி தினகரன் நான் கூட்டணிக்கு வருவேன் என்று காத்திருந்தார் நான் செல்லவில்லை.   விஜயகாந்த் போல அரசியல் செய்ய விரும்பவில்லை.   நான் பதவி வெறிக்காக அலைபவன் அல்ல. எம்.எல்.ஏ., எம்பி ஆக விரும்புபவனும் அல்ல.   

 


கடலூரில் நீங்கள் நின்றால் நிச்சயம் வெற்றிதான் என்று சொல்கிறார்கள். ஆனால் மருத்துவக்குழுவோ,  உங்களுக்கு வயது இருக்கிறது.  வேறு தேர்தலை பார்த்துக்கொள்ளலாம்.  இப்போதைக்கு உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.  தொண்டர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.  என் குடும்ப உறுப்பினர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.  

 

 எல்லாவற்றிற்கும் மேலாக என் தாய் தினமும் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு,  ‘’ தயவுசெய்து கேளூப்பா...உனக்கு அரசியல் பாதையெல்லாம் வேண்டாம்ப்பா...சின்ன வயசுலேயே இரண்டு முறை  எம்.எல்.ஏவாக இருந்துட்டே....நல்ல பேர் புகழ் சம்பாதிச்சுட்டே... போதும்’’என்று கண்ணீருடன் பேசுவது என் மனசை உலுக்குகிறது.  ஆகையால் நான் தேர்தலை பற்றி கவலைப்படவில்லை’’என்று தெரிவித்தார்.   

சார்ந்த செய்திகள்