வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி தரைப்பாலம், மரணப் பாலம் போல் உள்ளது. இதை உடனே பொதுப்பணித் துறை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியக் குடியரசு கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று அக்கட்சியின் வேலூர் மாவட்டத் தலைவர் இரா.சி.தலித் குமார் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழையில் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் நகரின் மையத்தில் ஓடும் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் சில நாட்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது. வெள்ளம் வடிந்து சில வாரங்களாகியும் பலத்த சேதமடைந்த தரைப்பாலத்தை அதிகாரிகள் சீரமைக்கவில்லை.
பாலத்தை ஒட்டி பல அடிக்குப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது, அதில் கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. போக்குவரத்து நெரிசலோடு காணப்படும் இந்த சாலையில், பலர் விழுந்து காயம் அடைகின்றனர். அரை நூற்றாண்டு கால பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும். உடனடியாக அதனைச் செய்யாவிட்டால் எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.