வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தவர் பெங்களூர் மாநிலம் பேகூர் பகுதியை சேர்ந்த சவுரப்பா என்பவரின் மகன் பாப்பையா. இவனுக்கு பாப்பு ராஜ், பாப்பு அண்ணன் என்றும் பெங்களூருவில் அழைப்பர்.
இவர் மீது கிருஷ்ணகிரி தளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வழிப்பறி கொலை கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை கிருஷ்ணகிரி போலிஸார் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஒரு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததால் சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார். இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பாக பரோலில் வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார், பரோல் முடிந்தும் சிறைக்குச் செல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் சுற்றித்திரிந்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் மத்திய சிறை நிர்வாகத்தினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். அதன் அடிப்படையில் போலிஸார் தலைமறைவானவனை தேடி வந்தனர்.
சுற்றி திரிந்தவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்தது. இவரைப் பிடிக்கும் பணியை திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பிரிவு டிஎஸ்பி ரவீந்திரன் உத்தரவின்பேரில் ஆய்வாளர் செல்வம் மற்றும் தலைமை காவலர்கள் ரமேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு டிசம்பர் 4 ந்தேதி இரவு பெங்களூர் பேகூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பாப்பையாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை அழைத்துவந்து விசாரணை நடத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.