தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாகக் காய்கறிகளின் விலை அதிகரித்தது. புதுச்சேரியில் கடந்த ஞாயிறு அன்று கனமழை காரணமாகக் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் அத்தியாவசிய காய்கறிகளுள் ஒன்றான தக்காளியின் விலை 150ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''மழையால்தான் தக்காளி விலை அதிகரித்துள்ளது. மழை இல்லாத மாநிலங்களிலிருந்து தக்காளி கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்த தக்காளி விலை உயர்வு என்பது தாற்காலிகமானதுதான். 600 மெட்ரிக் டன் தக்காளி வரவைக்கப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 10 உழவர் சந்தைகளைத் தொடங்குவதோடு அவை திறம்படச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் தக்காளி விற்கப்படும். 65 பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ''நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி, தக்காளி விற்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தகவலை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தக்காளி ஒரு கிலோ-79 ரூபாய், வெண்டைக்காய்-70 ரூபாய், உருளைக்கிழங்கு-38 ரூபாய், கத்தரிக்காய்-65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.