கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மாவட்ட சம்பா சாகுபடிக்கு கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் கல்லணையில் தேக்கி வைக்கப்பட்டு, பின்னர் ஜூன் 16 -ஆம் தேதி கல்லணையிலிருந்து கீழணைக்கு திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி கீழணைக்கு வந்த தண்ணீர் அணையில் தேக்கப்பட்டது.
கீழணை மற்றும் வீராணம் ஏரி ஆகிய பாசனத்திற்காக விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி கடலூர், தஞ்சாவூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்காக விகிதாச்சார அடிப்படையில் வடவாறு வாய்க்கால் மூலம் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும், வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் வினாடிக்கு 400 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடியும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி கீழணையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தனா, ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரைத் திறந்து வைத்தனர்.
கீழணையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு நேரடிப் பாசனமாக கொள்ளிடம் வடக்கு ராஜன், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொள்ளை மற்றும் வடவார் பாசனத்திற்கு உட்பட மொத்தம் 47 ஆயிரத்து 997 ஏக்கர் பாசனப் பரப்பும், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களின் நேரடி பாசனமாக கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால் குமுக்கி மன்னியார், விநாயகர் வாய்க்கால் வாயிலாக மொத்தம் 39 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பும், வீராணம் ஏரியில் இருந்து 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன பரப்பு உள்ளிட்ட மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி பெறப்படும்.
அவ்வப்போது பாசன தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றி அமைக்கப்பட்டு வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். தொடர்ச்சியாக அனைத்து பாசன வாய்க்கால்களுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், செயற் பொறியாளர் சாம்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் அருணகிரி, சக்திவேல், ரமேஷ், முத்துக்குமார், ஞானசேகர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.