வாணியம்பாடி கொலை வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஜீவா நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 10- ஆம் தேதி ம.ஜ.க. நிர்வாகி வசீம் அக்ரம், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தன்னுடைய ஏழு வயது மகனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட கொலைக் கும்பல் வசீம் அக்ரமை வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, காரில் தப்பிச் சென்றது.
காவல்துறையின் விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ் தூண்டுதலின் பேரில், இந்தக் கொலை நடந்ததாகத் தெரிய வந்தது. இம்தியாஸ் கேட்டுக்கொண்டதால், 8 பேர் சேர்ந்து கூலிக்காகக் கொலை செய்தோம் என வாக்குமூலம் தந்துள்ளனர்.
அவர்கள் சொன்ன தகவலின்படி, தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகளைப் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கொலைக்கு முக்கியமான மூளையாகச் செயல்பட்ட இம்தியாஸ், சிவகாசி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராஜேஷ்கண்ணன் முன்னிலையில், நேற்று (13/09/2021) மாலை 04.30 மணி அளவில் சரணடைந்தார். வரும் செப்டம்பர் 21- ஆம் தேதி வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்ரேட் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-ஜெயிலில் இம்தியாஸ் அடைக்கப்பட்டார்.