திருவண்ணாமலை மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இன்று (09/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு நாளை (10/01/2022) முதல் கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். சுவாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது, கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.