தர்மபுரியைச் சேர்ந்த பிரசாந்த் - விஜயலட்சுமி தம்பதியினர், கோவை மசக்காளிபாளையத்தில் தங்கி வேலைசெய்து வருகின்றனர். பிரசாந்த் அந்தப் பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிசாந்துக்கு நேற்று (17.02.2021) அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெற்றோர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட மூன்றுமணி நேரத்தில் குழந்தை மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர், குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தடுப்பூசி காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குழந்தை கிஷாந்தின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
“அந்தக் குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்தில் நேற்று இதேபோன்று 13 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த ஒரு குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. எனவே பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இதில் உயிரிழப்புக்கான உண்மை தெரியவரும்” என முன்னரே சுகாரத்துறை அதிகாரிகள் தரப்பு கூறியிருந்த நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின் தற்பொழுது சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், “தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிழந்தது நிமோனியா காய்ச்சலால்தான். தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.