ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணையில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டு தடுப்பணையில் தற்போது 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் நேற்று (18.11.2021) இரவு திறக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நீரானது படிப்படியாகக் குறைந்து 90 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் இருக்கிற பொன்னை தடுப்பணைக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் கலவகொண்டா அணையிலிருந்து 10,000 கனஅடி நீரானது திறக்கப்படுகிறது. அந்த நீரும் பாலாற்றுக்கு வரக்கூடிய நிலையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீர் நிலைகளுக்குச் சென்று பொதுமக்கள் செல்ஃபி எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1903ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலாற்றில் இன்று விடியற்காலை 3 - 4 மணிக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதாகத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.