தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) காலை தொடங்கி நடைபெற்றது. முதல் நாளான நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். சட்டப்பேரவையில் அவர் உரையாற்றும் போது தமிழில் தனது உரையை வாசித்தார். இந்நிலையில் ஆளுநர் உரையாற்றுகையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்ததும், 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்கு பதில் 'திஸ் கவர்ன்மென்ட்' என மாற்றியும் வாசித்தார். இதனை எதிர்த்து திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஆளுநர் தனது உரையைத் தொடர்ந்தார். அப்போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் 'தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்குப் பின் பேரவைத் தலைவர் அப்பாவு உரையாற்றினார். அதன்பின் தமிழக முதல்வர் பேசுகையில், “உரையை முறையாக ஆளுநர் படிக்கவில்லை. இது விதியை மீறிய செயலாகும். சட்டமன்ற விதி எண் 17-ஐ தளர்த்தி இன்று அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தையும்....'' என முதல்வர் வாசிக்க, அங்கிருந்து விறுவிறுவென எழுந்து நடந்து தமிழக ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அவையின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 1.15 மணி அளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசும்போது, "தமிழ்நாடு ஆளுநர் தமிழை சரியாக உச்சரிக்கவில்லை. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் நான் ஆளுநர் மாளிகைக்கு சென்று போராட்டம் நடத்துவதாகக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை அருகே உள்ள காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது பெட்ரோல் கேனுடன் ஒருவர் அங்கு வந்தார். அவரைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவரது பெயர் ரவிச்சந்திரன் என்பதும், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் குளிர்பான கடை ஒன்றில் வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் இவரின் சொந்த ஊர் தென்காசி என்பதும் தெரிய வந்தது. "இவர் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்ததும் பின்னர் டிடிவி தினகரனின் அ.ம.மு.கவில் இருப்பதாகவும், இவர் ஏற்கனவே ஒரு முறை டி.டி.வி. தினகரனை சிபிஐ கைது செய்தபோது சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று சம்பவத்தின்போது இவர் சற்று மது போதையில் இருந்ததாகவும்" போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இவரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.