கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வாட்ஸ் அப்பில் அலகு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்பு ஆகியவற்றில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அலகு தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதற்காக மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும்; 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாளை அதில் பதிவிட்டு விடைகளை எழுதி வாங்க வேண்டும்; இதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்று, இந்த அலகு தேர்வினை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.