'ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்' என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தினர் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள காலி இடத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தனியார் மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பிப்ரவரி 1- ஆம் தேதி தொடங்கினர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டாக்டர். ராஜா தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் இளம் மருத்துவப் பிரிவு தலைவர் அபுஹாசன், முன்னாள் மாநிலத் தலைவர் சுகுமார் உள்பட பல்வேறு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியன் மெடிக்கல் அமைப்பு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, "ஆயுர்வேத மருத்துவம் படித்த மருத்துவர்கள் கிட்டத்தட்ட 60 வகையான அலோபதி அறுவை சிகிச்சையைச் செய்யலாம் என்று ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இது மட்டுமின்றி, வரும் 2030- க்குள் 'ஒரே தேசம், ஒரே மருத்துவமுறை'யைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முனைப்பு எடுத்துவருகிறது. இது பாதுகாப்பில்லாத மருத்துவ முறையாகும்.
இதை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 14 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். இரண்டாம் நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 60 மையங்களில் இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் 38,000 தனியார் மருத்துவர்கள் உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு அரசு பல் மருத்துவர்கள், செவிலியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.