Skip to main content

மாநிலங்கள் மீது பொருளாதார நெருக்கடியை சுமத்துகிறது ஒன்றிய அரசு! மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

 

UNION GOVERNMENT ECONOMIC CRISIS CHIEF MINISTER MKSTALIN

 

மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி வருவாயை ஒன்றிய அரசு சுரண்டி தின்றுவிட்டு, பொருளாதார நெருக்கடியை சுமத்துகிறது என்று ஒன்றிய அரசு மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், சேலம் மாவட்டம், ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை (மே 24) நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 

சேலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார். தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி தொகுதிக்கும் சென்று கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்த தொகுதியில் வேலை கேட்டு 10000 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் தரப்படவில்லை. 

அனைத்து விண்ணப்பங்களையும் கட்டு கட்டாக பிரிண்ட் எடுத்துச்சென்று மக்களிடம் காட்டினேன். அத்தனை பேரின் வேலைவாய்ப்புக்காக ஒரு திட்டம் கூட தீட்டாதவர்தான் அன்றைக்கு இருந்த முதல்வர் பழனிசாமி. முதல்வர் தொகுதியாச்சே... பெரிய அளவில் புகார்கள் இருக்காது என்று நினைத்தேன். இரண்டு மணி நேரம் என்னிடத்தில் புகார்களைச் சொன்னார்கள். போட்ட ரோட்டையே போட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். 

 

எடப்பாடியில் ஜவுளி பூங்கா, நெருஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றின் குறுக்கே பாலம், கொங்கணாபுரத்தில் தொழில் பூங்கா, மேட்டூர் உபரிநீர் பயன்பாடு, எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு, கொங்கணாபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம், மின் மயானங்கள், தேங்காய், மா, பருத்தி, மரவள்ளிக்கிழங்கு  ஆகியவற்றுக்கு ஆதார விலை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நிலக்கடலை உழவர்களுக்கு தனி கூட்டுறவு சங்கம் ஆகிய கோரிக்கைகளில் ஒன்று கூட தன் சொந்த தொகுதியில் பழனிசாமி நிறைவேற்றவில்லை.  

 

ஆனால், இன்றைக்கு தினமும் தி.மு.க. ஆட்சியை குறை சொல்லி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். தன் ஆட்சிக் காலத்தில் எதையாவது இந்த மாவட்டத்திற்கு செய்திருக்கிறாரா என்பதுதான் என் கேள்வி. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை கொள்ளை ஆகியவைதான் பழனிசாமி ஆட்சியின் வேதனையான சாதனைகள். 

 

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில், பத்தாண்டுகள் செய்யக்கூடிய சாதனைகளை இந்த ஓராண்டில் செய்திருக்கிறோம் என்பதை நெ-ஞ்சை நிமிர்த்தி கூறுவேன். சேலம் மாவட்டத்தில் செய்துள்ள சாதனைகளை சொல்வதற்கே நேரம் போதாது. முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 23,965 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்றவர்களில் 1,45,000 பேரில் 438 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 6 கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். 7.01 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். 10.19 லட்சம் குடும்பத்தினர் கொரோனா நிவாரணம் பெற்றுள்ளனர். 

 

கடந்த டிச. 11- ஆம் தேதி சேலத்தில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அன்றைய விழாவில், மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டேன். அதாவது, சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, கொலுசு உற்பத்திக்காக 28 கோடியில் பன்மாடி உற்பத்தி மையம் அமைப்பு, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கருப்பூரில் டைட்டல் பூங்கா அமைக்கப்படும் என்று கூறினேன். 

 

இந்த மூன்று திட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு நடத்தியுள்ளனர். இவை மூன்றுமே சேலத்திற்கு மிக மிக முக்கியமான நீண்ட கால கோரிக்கைகள். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திமுக அரசு ஏராளமான திட்டங்களை செய்து உள்ளது. 

 

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பெட்ரோல் விலையை குறைப்போம் என்றோம். அது முடியுமா? சாத்தியமா? என்று பல பேர் கேட்டனர். விமர்சனம் கூட செய்தனர். ஆட்சி பொறுப்பேற்ற உடன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த அரசுதான் நம்முடைய திமுக அரசு. 

 

இப்படி விலையை நாம் குறைத்து ஓராண்டு ஆகிவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன்பு ஒன்றிய அரசு இப்போதுதான் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு 1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை வருவாய் இழப்பு என்று நிர்வாக ரீதியாகச் சொன்னாலும், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1,160 கோடி ரூபாய் சலுகை மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

 

தற்போது ஒன்றிய அரசு, கலால் வரியை குறைத்துள்ளது. இதன்மூலமாக பெட்ரோல் 9.50 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் குறைகிறது. இதில் ஒன்றிய வரி குறைப்பு 8 மற்றும் 6 ரூபாய். மாநில அரசின் வரி குறைப்பு 1.50 மற்றும் ஒரு ரூபாய் ஆகும். ஒன்றிய வரி குறைக்கப்படும்போது மாநில வரியும் தானாக குறையும். எனவே ஒன்றிய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு. 2014- ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது அன்றைக்கு இருந்த பெட்ரோல் விலை என்ன? இப்போதுள்ள விலை என்ன? என்பதை அவர்கள் விளக்க வேண்டும். 

 

2014 மே மாதம் பெட்ரோல் மீதான ஒன்றிய வரியானது லிட்டருக்கு 9.48 ரூபாயாக இருந்தது. 2022 மே மாதம் 27.90 ரூபாயாக உள்ளது. இதில் 8 ரூபாய் குறைத்துள்ளனர். அப்படி பார்த்தால் 19.90 ரூபாய் ஒன்றிய வரி உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே அதிகமாக உயர்த்தியதில் இருந்து குறைவாக குறைத்துள்ளனர். பல மடங்கு விலை ஏற்றிவிட்டு சிறிய அளவில் விலை குறைத்துள்ளனர். 

 

ஐந்து மாநிலத்தில் தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தாமல் இருந்தனர். தேர்தல் முடிந்த பிறகு, கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை 10 ரூபாய் வரை உயர்த்தி உள்ளனர். அதில் இருந்து தற்போது 9.50 ரூபாய் குறைத்துள்ளனர். மாநிலங்களுடைய அனைத்து நிதி வருவாயையும் சுரண்டி தின்றுவிட்டு, ஒரு விதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகளின் மீதும் ஒன்றிய பாஜக அரசு சுமத்துகிறது.  

 

மக்களோடு மக்களாக இருந்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், சாலை வசதிகள், மின்சாரம், சத்துணவு, ஊட்டச்சத்து என அனைத்தையும் மாநில அரசிடம்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

 

இவை அனைத்தையும் செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அத்தகைய மாநில அரசுகளை மக்களுக்கு சேவையாற்ற விடாமல் தடுப்பதற்கு, நிதி உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு பறிக்கிறது. 

 

ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டிய 21,760 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இதுவரை வரவில்லை. இந்த ஓராண்டு காலத்தில் இவ்வளவு சாதனைகளை செய்துள்ளோம் என்றால் இத்தகைய நிதிநெருக்கடியை பொறுத்துக்கொண்டு செய்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் நம்முடைய தி.மு.க. அரசு பல்வேறு வாக்குறுதிகளையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறது. 

 

இவற்றை எல்லாம் கருப்பும் சிவப்பும் தங்கள் குருதியில் கலந்து ஓடக்கூடிய தி.மு.க. தொண்டர்கள், இந்த இயக்கத்தின் தீரர்கள், உடன்பிறப்புகள் வீடு வீடாக வீதி வீதியாக சென்று மக்களின் மனதில் விதைக்க வேண்டும். இதுதான் கழக உடன்பிறப்புகளின் கடமை." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.