இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் பெரும் அளவில் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தனிமனித இடைவெளி, முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என மருத்துவர்களும் அத்துறை வல்லுநர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே, யுனிசெஃப், பொது சுகாதாரம் மற்றும் மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகிய அமைப்புகள் இணைந்து கரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடத்தினர்.
முகக் கவசம் அணிவோம், கைகளை சுத்தமாக வைத்திருப்போம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவோம், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் என இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநியாகம், எம்.அண்ணாதுரை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிஐபி உட்பட பலர் பங்கேற்றனர்.