அல்ட்ரா டீலக்ஸ் எனப் பெயரிடப்பட்ட அரசுப்பேருந்தில் மழை பெய்த நேரத்தில் பேருந்துக்குள் மழை நீர் புகுந்ததால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
திருப்பத்தூரிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு சென்னைக்கு அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் மேற்பரப்பிலிருந்து ஆங்காங்கே இருக்கைகளில் மழை நீர் கசிய தொடங்கியது. இதனால் பயணிகள் மழையில் நனையும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருக்கை முழுவதும் ஈரமானதால் வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் பேருந்தை நிறுத்தி பயணிகள் இறங்கி பேருந்துக்கு முன் நின்றனர்.
மேலும், " வேலூருக்கு செல்ல சாதாரண பேருந்தில் 70 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் 95 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, இப்படி மழையில் நனைந்து செல்வதற்குத்தான் கூடுதல் கட்டணமா? எனப் பயணிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மாற்று பேருந்து ஏற்பாடு செய்தால் மட்டுமே நாங்கள் தொடர்ந்து செல்ல முடியும் எனக் கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.