முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2013இல் இருந்து 2021 ஏப்ரல் வரை அமைச்சராகப் பதவி வகித்தவர். அவருடைய சொத்து கணக்கு குறித்து கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து 2021 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாகவும், அவருடைய மனைவி ரம்யா பெயரிலும் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனா். இந்நிலையில் நேற்று (18.10.2021) விஜயபாஸ்கருக்கு சொந்தமான 48 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அவரிடமிருந்து 105 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிவா ரைஸ் மில் உரிமையாளா் தர்மலிங்கம் வீட்டில் சோதனை செய்தனா். அதில் 98 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விஜயபாஸ்கரின் உதவியாளரான குருபாபு வீட்டில் தொடர் சோதனை நடைபெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் தகவல் தெரிவித்துள்ளனா்.