/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died_15.jpg)
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த். இவர் லாரி ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவரது மகள் எட்டு வயது சஞ்சனா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அருகிலுள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்குமார் என்பவரது மகன் குமரேசன்(8) இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். குமரேசன், சஞ்சனா இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வரும் நண்பர்கள்.
இவர்களுடன் மேலும் இரு நண்பர்கள் உட்பட 4 பேர் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் 2 பேர் கிணற்றிலிருந்து வெளியே வந்துவிட்டனர். குமரேசன், சஞ்சனா ஆகிய இருவரும் வெகு நேரமாகியும் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் முதலில் வெளியே வந்த இரண்டு சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு சென்று கிணற்றில் இறங்கி சிறுவர்களைத் தேடினர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை இதையடுத்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு சஞ்சனாவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில் குமரேசன் உடலைக் கிணற்றிலிருந்து சடலமாகத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு சிறுவர்களின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி நகர மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)