முதுமலை புலிகள் காப்பகத்தில் இறந்த தாய் புலி அருகே இரண்டு ஆண் புலிக் குட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. அவை இரண்டும் தெப்பக்காடு யானை முகாமில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த இரண்டு புலிக் குட்டிகளும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில தினங்களுக்குமுன் பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அந்தப் புலியின் அருகே பிறந்து மூன்று வாரங்களே ஆன இரண்டு ஆண் புலிக் குட்டிகள் இருந்தது. அவற்றை மீட்ட வனத்துறையினர், தெப்பக்காடு யானைகள் முகாமில் பாதுகாத்தனர். பின்னர், தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள், வண்டலூர் உயிரியல் பூங்கா அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் இரண்டு புலிக் குட்டிகளும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து இரண்டு ஆண் புலிக்குட்டிகளும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.