கோவை மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(45), தேவி(33) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன், தேவி இருவரும் புலுவப்பட்டி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலையில் இவர்கள் வழக்கம்போல் சைக்கிளில் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருவரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டனர். இதனைக் கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தைத் தொடர்ந்து இயக்கியதால் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இருவரது உடல்களும் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் பேருந்தைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பேருந்து ஓட்டுநர் தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவர்களது பிள்ளைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பிள்ளைகள், “காலையில் வேலைக்குப் போன அம்மா, அப்பா திரும்பி வரவில்லை” என்று கதறி அழும் காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.