
சேலத்தில் தொடர்ந்து வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம், லீ பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காபி பாரில் வேலை செய்து வருகிறார். ஏப். 7ம் தேதி, கடைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக லீ பஜாருக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், சம்பத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதேபோல், தம்மம்பட்டியைச் சேர்ந்த இருவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏப். 4ம் தேதி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களிடமும் மர்ம நபர்கள் இருவர், கத்தி முனையில் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சேலம் பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் பெரியசாமி (29), சேலம் லைன்மேடு பென்ஷன் லைன் தெருவைச் சேர்ந்த இனாயத்துல்லா மகன் சாதிக்பாஷா (28) ஆகிய இருவரும்தான் மேற்கண்ட குற்றங்களில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
சாதிக்பாஷாவும், பெரியசாமியும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 26) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கைது ஆணை, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேரில் வழங்கப்பட்டது.