சேலத்தில், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி தலைமலை நகர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணையன் மகன் அருண் என்கிற அருண்குமார் (27). செவ்வாய்பேட்டை பாண்டித்துரை வீதியைச் சேர்ந்த மோகன் மகன் கெத்தை சேகர் என்கிற குணசேகரன் (35) ஆகிய இருவரையும் சேலம் மாநகர காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அருண்குமாரும், கெத்தை சேகரும் கடந்த பிப். 5ம் தேதி, சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை முன்விரோதம் காரணமாக கண்ணாடி டம்ளரால் தாக்கி, பலத்த காயம் ஏற்படுத்தினர். அதைத் தடுக்க வந்த பொதுமக்களையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இந்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் அவர்களை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில் அருண்குமார் மீது கடந்த 2018ம் ஆண்டு, வைகுந்தம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கிலும், அதே ஆண்டில் தாதகாப்பட்டியில் இளநீர் வியாபாரி ஒருவருக்கு கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் கெத்தை சேகர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் ஏற்கனவே 2013, 2016, 2017ம் ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட இருவரும் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் இருவரும் மார்ச் 6ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.