மணப்பாறை அருகே நெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். மேலும் இரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டிக்கு ரஸ்க் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆவாரம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது டயர் பஞ்சாராகி சாலையோரம் நிறுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சங்க விருது வழங்கும் விழாவிற்கு சென்றுவிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்கள் தனது இரு நண்பர்களுடன் பொலிரோ காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆவாரம்பட்டி பிரிவு அருகே சென்ற கார், பழுதாகி நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த பத்திரிக்கையாளர் முகமது அஸ்லாம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அன்னக்கொடிமாயன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.
மேலும் அவர்களுடன் காரில் இருந்த பத்திரிகையாளர்கள் வேல்முருகன், சிவக்குமார் மற்றும் கார் ஒட்டுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உயிரிழந்த முகமது அஸ்லாம், அன்னக்கொடிமாயன் ஆகியோர் உடல்கள் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வையம்பட்டி போலீஸார் லாரி ஓட்டுநர் அழகப்பா என்பவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.