Skip to main content

இருநூறு ரூபாய் லஞ்சம் வாங்கி வீடியோவில் சிக்கிய தலையாரி! -இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
tn

 

சாமானியர்கள் கையிலும் கேமரா செல்போன் இருக்கிறது. ஆனாலும், எவரிடமும் கூசாமல் லஞ்சம் கேட்கிறார்கள்; வாங்குகிறார்கள். அரசுத்துறையில் லஞ்சம் என்பது  தலையாரியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.  விருதுநகர் மாவட்டத்தில், தலையாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதை செல்போனில் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை  நமக்கு அனுப்பினார் ஒரு நண்பர். 

 

thi

 

அந்த வீடியோ பதிவில் - 

விருதுநகர் – சின்னமூப்பன்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் தலையாரியாகப் பணிபுரியும் நந்தா,  பப்ளிக்கிடம்  ரெகார்ட் ஒன்றைக் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்கிறார்.  அந்த நபரோ, 100 ரூபாய் தாள் இரண்டை நீட்டி, “என்னிடம் 200 ரூபாய்தான் இருக்கு. அவ்வளவுதான் இருக்கு.” என்கிறார். தலையாரி நந்தாவோ, “நான் ஓபனாத்தான் பேசுறேன். உங்ககிட்ட ரெகார்டை கொடுக்கணும்கிற அவசியம் எங்களுக்கு  இல்ல.” என்று வாக்குவாதம் செய்கிறார். பதிலுக்கு அந்த நபர் “இல்ல சார். அவருதான் அனுப்பினாரு. இருநூறுதான் கொடுக்கச் சொன்னாரு.” என்கிறார். பணத்தை வாங்கிக்கொண்ட தலையாரி நந்தா, “ஏன்னா.. அவருக்குத் தெரியும். இது பேங்க்காரனுக்குத் தெரியும்.” என்று சொல்லிவிட்டு “இருந்தாலும் இது எனக்குத் தேவையில்ல. என் நேரம் போல.” என்று சலித்துக்கொள்கிறார்.  

 

ஊழல் செய்து கோடிகளில் திளைக்கும்  அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும்  ஒப்பிடும்போது, தலையாரி 200 ரூபாய் லஞ்சம் வாங்குவதெல்லாம் பெரிய விஷயமா? என்று கேட்கத் தோன்றும். சாமானிய மக்களைப் பொறுத்தமட்டிலும் 200 ரூபாய் லஞ்சம் என்பது பெரிய விஷயம்தான். நீதித்துறையும் அப்படித்தான் பார்க்கிறது.  அம்பலவார்கட்டளை கிராமத்தில்,  ரூ.500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனுக்கும், அவரது உதவியாளர் கணேசனுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம். 

 

தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்துகொண்டு, முறைகேடாக  கோடிகளில் சொத்து குவித்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது  4 ஆண்டுகள் சிறைத் தண்டனைதானே! ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கும், உதவியாளருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையா? என்று நம்மையும் அறியாமல் முணுமுணுப்போம். ஆனால், நீதியின் பார்வையே வேறு!  

 

சட்டமும் தண்டனையும் இத்தனை கடுமையாக இருந்தாலும், லஞ்சம் வாங்கிப் பழகிவிட்ட அரசுத் துறையினர் இன்னும் திருந்தியபாடில்லை.

 

சார்ந்த செய்திகள்