இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (29/11/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகின்றன. வரும் டிசம்பர் 1ஆம் தேதி அன்று அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி அன்று மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். தெற்கு அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தெற்கு அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா, இல்லையா என்பது வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்பில் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.