கள்ள நோட்டுகள் தயாரித்து மாற்றிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சில்லி சிக்கன் கடை ஒன்று இருக்கிறது. இந்தக் கடைக்கு நேற்று இரவு, இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் 500 ரூபாய் நோட்டு கொடுத்து சில்லி சிக்கன் வாங்கி உள்ளனர்.
அவர்கள் கொடுத்த அந்த 500 ரூபாய் நோட்டு, கள்ள நோட்டு போல இருந்ததால் சந்தேகமடைந்து கடையில் வேலை செய்துவரும் பாலு என்பவர் ஈரோடு வடக்கு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தக் கள்ள நோட்டு கொடுத்தது ஈரோடு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்த மாசானம் மகன் சதீஸ், கோபால் மகன் சவுந்தர்ராஜன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்ட இருவரும் காரில் சென்று துணி வியாபாரம் செய்து வந்ததும், கரோனா கால ஊரடங்கிற்குப் பிறகு வியாபாரம் சரிவர இல்லாததால் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடிவந்த நிலையில், யூ ட்யூப் மூலம் கள்ள நோட்டுகளை தயாரிப்பது எப்படி என்று பார்த்து, ஜெராக்ஸ் மிஷின் மூலம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, கள்ள நோட்டுகளை தயாரித்தாக இருவரும் ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள் ரூபாய் 20,100, கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட கார், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்தனர்.