தூத்துக்குடி மாவட்டம், திருமலைக் கொழுந்துபுரம் கிராமத்திலிருந்து நேற்று (16.02.2021) அதிகாலை 7 மணியளவில் குட்டி யானை எனப்படும் மினிலாரி வாகனத்தில் 34 பெண்கள் விவசாயக் கூலி வேலைக்காகக் கிளம்பியுள்ளனர். மினி லாரியை திருமலைக் கொழுந்துபுரத்தின் சித்திரை என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டத்தின் புதியம்புத்தூர் மற்றும் மணியாச்சிப் பகுதியிலுள்ள வயல்வெளிகளில் விளைந்த உழுந்துப் பயிர்களை அறுவடை செய்யும் பொருட்டு வேலைக்குக் கிளம்பிச் சென்றுள்ளனர்.
காலை 8 மணியளவில் மணியாச்சிப் பக்கமுள்ள குறுகலான வளைவான ‘எஸ்’ பெண்ட் வளைவு சாலையின் சரிவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பாதையோரத்தில் சறுக்கி அங்கிருந்த பாலத்தில் வேகமாக மோதிக் கவிழ்ந்திருக்கிறது. எதிர்பாராத இந்த விபத்து காரணமாக பிடிமானம் இல்லாத நிலையிலிருந்த சில பெண்கள், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர். பல பெண்கள் வேனுக்கடியில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணியாச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம்பட்ட 23 பேரை மீட்டு தூத்துக்குடி ஒட்டப்பிடாரம், பாளை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களில் மணப்படை வீடு பேச்சியம்மாள் (30), ஈஸ்வரி (27), கணேசன் மனைவி மலையரசி (48), மனோகரன் மனைவி பேச்சியம்மாள் (54) வேலு மனைவி கோமதி (65) என சம்பவ இடத்தில் பலியான 5 பேரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்து, மணப்படை வீடு சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.