Skip to main content

பண மதிப்பிழந்த துருக்கி நாட்டு கரன்சி ரூ.2 கோடி சிக்கியது... இரட்டிப்பு மோசடி திட்டமா..?

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Turkish currency worth Rs 2 crore caught

 

தூத்துக்குடி தெர்மல் நகரின் காவல் ஆய்வாளரான கோகிலா தலைமையிலான போலீசார், அவர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், எஸ்.பி. ஜெயக்குமாரின் உத்தரவுப்படி, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில், சுற்றித் திரிந்த ஐந்து வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். 
 

அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது, அதில் வெளிநாட்டுக் கரன்சி இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் அதற்கான முகாந்திரமும் கிடையாது. அதனால் அவர்களைக் கைது செய்தனர். 

 

police arrest

 

கோவையைச் சேர்ந்த ஜீவா, தென்காசி மாவட்டம் சுரண்டைப் பகுதியின் விஜய மாணிக்கம், அதன் பக்கத்திலுள்ள கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மது புகாரி, முகம்மது ஸ்ரிவான், முகம்மது அஸ்கர் உள்ளிட்ட ஐந்து பேர்கள் என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது. தொடர் விசாரணையில், அது துருக்கி நாட்டின் இரண்டு கோடி மதிப்பிலான 40 கரன்சி நோட்டுக்கள் எனவும் ஒரு கரன்சியின் இந்திய மதிப்பு ரூ.5 லட்சம் மதிப்புள்ளது எனவும் தெரியவந்திருக்கிறது. 

 

Turkish currency worth Rs 2 crore caught


அந்தக் கரன்சி பற்றி உரிய இடத்தில் விசாரித்ததில், துருக்கி நாட்டின் அந்தக் கரன்சியை அந்நாடு 2006ன் போதே பணமதிப்பிழப்பு செய்துள்ளது எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், அவர்களது விசாரணையில், தென் மாவட்டத்தில் ஹவாலா பணம் மற்றும் வெளி நாட்டுக் கரன்சிகளின் டீலிங்கில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. அவர்களின் மூலம் மிகப் பெரிய அளவில் இரட்டிப்பு மோசடியில் இவர்கள் ஈடுபடத் திட்டம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார்.
 

தூத்துக்குடியில் பிடிபட்ட துருக்கி நாட்டின் செல்லாத கரன்சி, அம்மாவட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்