
சேலத்தில் போலி ஆவணங்கள் மூலம் 18 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் கிளெய்ம் பெற முயற்சி செய்த ஆட்டோ உரிமையாளர்கள் மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் குகை பகுதியில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், சண்முகநாதன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீராணம் சாலையில் ஒரு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் என்பவர் இறந்து விட்டார். அவருடைய மனைவி ஹேமலதா, தாய், மணிமேகலை, தந்தை மோகன்ராஜ் ஆகியோர் இழப்பீடு கேட்டு, சேலம் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 18 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க எங்கள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
எங்கள் நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவை வைத்து விசாரணை நடத்தியதில், போலி ஆவணங்களை தயாரித்து மற்றொரு ஆட்டோவின் இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்கள் மோசடியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இழப்பீடு பெற முயற்சி செய்திருக்கின்றனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, அந்த விபத்தில் சிக்கிய ஆட்டோவின் உரிமையாளரான வாழப்பாடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஆட்டோவை விற்பனை செய்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கமணி, களரம்பட்டியைச் சேர்ந்த ராஜாமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் மேற்கண்ட மூவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய ஆட்டோவும், இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் ஆவணங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை என்பதோடு, போலியானவை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மோசடிக்கு சில புரோக்கர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.