Skip to main content

1.10 கோடி ரூபாய் முந்திரியுடன் லாரி கடத்தல்; அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

Truck smuggling with cashew nuts worth Rs 1.10 crore; 7 arrested including AIADMK ex-minister's son

 

ராசிபுரம் அருகே, 1.10 கோடி ரூபாய் முந்திரி லோடுடன் லாரியை கடத்தி வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியாருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து வெள்ளிக்கிழமை (நவ. 26) 8 டன் அளவிற்கு 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு, ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதற்காக தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி லாரி புறப்பட்டது. 

 

தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரி என்பவர் லாரியை ஓட்டிச்சென்றார். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் லாரியை வழிமறித்தனர். மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதால் மிரண்டு போன லாரி ஓட்டுநர், கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த கும்பல் லாரியைக் கடத்திச்சென்றது. 

 

நடந்த சம்பவங்கள் குறித்து லாரி ஓட்டுநர் ஹரி, முந்திரி தொழிற்சாலை மேலாளர் ஹரிஹரனுக்கு தகவல் அளித்தார். அவர், இதுகுறித்து புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், தூத்துக்குடி டி.எஸ்.பி. சந்தீஸ்குமார் தலைமையில் காவல்துறையினர், கடத்தப்பட்ட முந்திரி லாரியை தேடி வந்தனர். 

 

லாரியை கடத்திய மர்ம கும்பல் உஷாராக அதில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியைக் கழற்றி வீசியெறிந்து விட்டது. இதனால் லாரி, எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை காவல்துறையினரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

எனினும், முந்திரி லோடு லாரி குறித்த விவரங்கள் அனைத்து சுங்கச்சாவடி, காவல்துறை சோதனைச் சாவடிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்த லாரி நாமக்கல் மாவட்டம் நோக்கிச் செல்வதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. 

 

 

தனிப்படை காவல்துறையினர் நாமக்கல் விரைந்தனர். இதையறிந்த கடத்தல் கும்பல், ராசிபுரம் அருகே மேட்டுக்காடு பகுதியில் நடுவழியில் முந்திரி லோடுடன் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டது. 

 

மேட்டுக்காடு பகுதிக்கு வந்த தனிப்படையினர் லாரியை முந்திரி லோடுடன் மீட்டனர். இது ஒருபுறம் இருக்க, தூத்துக்குடி தனிப்படை காவல்துறையினர் நாமக்கல் மாவட்ட எல்லையான திம்மநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். 

 

அந்த காரில் 7 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த கும்பல்தான் முந்திரி லோடுடன் வந்த லாரியை கடத்திச்சென்றது தெரிய வந்தது. 

 

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் உள்பட 7 பேர் சேர்ந்துதான் லாரியை கடத்தியவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

 

அவர்களை கைது செய்த தனிப்படையினர், புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட முந்திரி லோடு லாரி மற்றும் கடத்தல் கும்பல் ஓட்டி வந்த கார் ஆகியவையும் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 

 

முந்திரி லாரி கடத்தலுக்கான பின்னணி குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை டி.எஸ்.பி. சந்தீஸ்குமார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.  


 

சார்ந்த செய்திகள்