Skip to main content

ஆய்வாளருக்கு கிடைத்த ரகசியத் தகவல்; ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

trichy rowdy caught by police

 

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்குச் சென்றனர். 

 

அப்போது அங்கு மரங்களுக்கு இடையே ஒருவர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்துள்ளார். அவரிடம் காவலர்கள் நெருங்கி சென்றபோது அந்த நபர், யாரும் கிட்டே வராதீர்கள், வந்தால் சுட்டு விடுவேன் அல்லது பாம் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் அவர் அருகே நெருங்கி சென்றபோது, அந்த நபர் கையில் வைத்திருந்த பொருளை பாம் என்று கூறி வீசியுள்ளார். அது தொட்டியம் காவல் நிலைய முதல் நிலை காவலர் ராஜேஷ்குமார் என்பவரின் இடது தோள்பட்டையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. அது விழுந்த பிறகு தான், அது பாம் இல்லை பெரிய கல் என்று தெரியவந்தது. 

 

தொடர்ந்து அந்த நபர் போலீஸார் மீது துப்பாக்கியை நீட்டி சுட முற்படும்போது, காவல் ஆய்வாளர் முத்தையன் தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழ் சுட்டுள்ளார். அதனையடுத்து அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் அலெக்ஸ் (எ) அலெக்ஸாண்டர் சாம்சன், திருச்சி மாநகரம் அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

 

காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் (எ) அலெக்ஸாண்டர் சாம்சன் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயம்பட்ட காவலர் ராஜேஷ்குமார் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்