திருச்சியில் எத்தனையோ பழமையான இடங்கள் இருந்தாலும் பொழுதுபோக்கு என்று வரும்போது அன்றைய காலகட்டங்களில் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கிஸ்தான். அதிலும் காலணா, எட்டணா, அரையணா, என்று காசு கொடுத்து பல நடிகர்களை அமர்ந்து ரசித்துக் கொண்டாடிய சினிமா கொட்டகைகள் பல அழிந்துவிட்டன.
அதன் வரிசையில் கடந்த 1934ம் ஆண்டு திருச்சியில் கட்டப்பட்ட ராமகிருஷ்ணா தியேட்டர் இன்று 87 ஆண்டுகளை நிறைவு செய்தது. அதேசமயம் அது தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இந்த தியேட்டரின் உரிமையாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “1934ஆம் ஆண்டுகளில் பொழுது போக்கிற்காக என்னுடைய தந்தை குழந்தைவேல் கட்டினார். அதிலும், அந்தக் காலகட்டத்தில் மேட்டூர் அணை கட்டி நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் மிஞ்சிய பொருட்களை அங்கு இருந்து திருச்சிக்கு எடுத்துவந்து இந்த தியேட்டரை கட்டினார்.
திரை கட்டி 10,000 அடி 11,000 அடி நீளமுள்ள ஃபிலிம் ரோல்களைக் கொண்டு பலரை ரசிக்கவைத்து பலருக்கு சினிமா ஆவலை தூண்டி பல காவியங்களைப் படைத்த திரைப்படங்களை அடித்தட்டு மக்களும், கூலித் தொழிலாளிகளும் காணவேண்டும் என்பதற்காக இந்தப் பொழுதுபோக்குத் திரையரங்கை அவர் வடிவமைத்தார். இன்று, எத்தனையோ நவீனத் திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் என்று சொல்லக்கூடிய திரையரங்குகள் எல்லாம் பெருகிப் போயிருந்தாலும், அவர்களால் 200 ரூபாய் 300 ரூபாய் என்று பணம் செலவு செய்து திரைப்படங்களைப் பார்க்க முடியாது.
அன்று முதல் இன்று வரை எங்களுடைய தியேட்டரில் 25 ரூபாய்க்கு மேல் டிக்கெட் வசூல் செய்தது இல்லை. அதிலும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் அதிகபட்சமாக 50 ரூபாய் வரை நாங்கள் வசூல் செய்திருக்கிறோம். ஆனால், கடந்த ஆண்டு துவங்கி அந்த கரோனா நோய்ப் பாதிப்பால் திரையரங்குகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஒரு வருட காலம் முழுமையாக திரையரங்கு முடங்கியிருந்த நிலையில், அதைப் பராமரிக்க முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தோம்.
மீண்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் செயல்படலாம் என்று கூறியபோது அவற்றை மீண்டும் பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், இரண்டாவது அலை விச ஆரம்பித்துள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த திரையரங்கு சுமார் 500 இருக்கைகள் உள்ள நிலையில், ஒருவேளை திரையரங்கு இயக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், 350 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவில் இருக்கும். எனவே அது மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் திரையரங்கை முழுமையாக இடித்துவிடலாம் என்று முடிவு செய்து அதற்கான பணியை தற்போது துவங்கி உள்ளோம்” என்றார் வேதனையுடன்.