மத்திய அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு வருடத்திற்கு 200 கோடி ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அந்தந்த நகரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் புதிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அந்த நிதியில் இருந்து மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா உருவாக்குதல், வாய்க்கால்கள் சீரமைத்தல், வணிக வளாகங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மத்திய அரசு கொடுக்கும் நிதியை வைத்து சிறப்பாக திட்டங்களைச் செயல்படுத்தும் நகரங்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் விருதுகளை வழங்கி கவுரவித்துவருகிறது. இந்தமுறை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை சிறப்பாக அமல்படுத்தி, அதற்காக ஒட்டுமொத்த விருதையும் தட்டிச் சென்றுள்ளன. தமிழ்நாட்டில் ஈரோடு, திருநெல்வேலி மாநகராட்சிகள் விருதுபெற்றுள்ளன. அடுத்ததாக இரண்டாம் நிலை விருது பட்டியலுக்கு 71 மாநகராட்சிகளின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலிலும் திருச்சி மாநகராட்சியின் பெயர் இடம்பெறவில்லை.