திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காந்தி மார்கெட் பகுதிக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதால் கரோனா நோய் தொற்றும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காந்திமார்கெட்டை மூட வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டனர்.இருப்பினும் வணிகர்களின் நிலையை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்தது. காந்தி மார்க்கெட் பகுதியில் தற்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மார்க்கெட் பகுதியில் தொடர்ந்து கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், தற்காலிகமாக பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து மேலபுலிவார் சாலை வரை உள்ள சாலையில் இரவு மொத்த வியாபாரமும், காலை சில்லறை வியாபாரமும் செய்ய திட்டமிட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை முதல் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடத்தில் மார்கெட் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.