தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பயனாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் நாளை (07/06/2021) முதல் மாநிலம் முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்துகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம், மீன் மார்க்கெட் ஆனது காந்தி மார்க்கெட் பகுதியிலும், புத்தூர் மார்க்கெட் பகுதியிலும் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது மீன் மார்க்கெட் குழுமணி சாலையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மார்க்கெட்டில் கூடுவதால் தொடர்ந்து நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை நாளை (07/06/2021) முதல் மீன் மார்க்கெட் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு போதுமான அளவில் இடவசதி உள்ளதால் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மீன்களை வாங்க ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.