திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மேலகுமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாதமணி. இவர், ‘பெல்’ நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவருடைய மனைவி சாந்தி, அப்பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்ததோடு, சேலை மற்றும் நைட்டி போன்றவற்றை மாதத் தவணைக்கு அப்பகுதியில் விற்பனை செய்துவந்துள்ளார்.
இவரிடம், அதே பகுதியில் வசிக்கும் ராமதுரையின் மனைவி பூங்குழலி (33) என்பவர் துணி வாங்கியுள்ளார். அந்த வகையில், ரூ. 12 ஆயிரம் கடனாகியுள்ளது. இதனால் சாந்தி, பூங்குழலியிடம் தனக்குத் தர வேண்டிய பணத்தைத் தரும்படி அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால், பூங்குழலி பணத்தைக் கொடுக்கவில்லை.
இந்தநிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி, பூங்குழலி சாந்திக்கு தர வேண்டிய பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார். எனவே மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு வந்தால் பணத்தைத் தருகிறேன் என்று சாந்தியிடம் அவர் கூறியுள்ளார்.
அதை நம்பி சாந்தி பூங்குழலியின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தனது வீட்டுக்குப் பணம் வாங்க வந்த சாந்தியை, பூங்குழலி கட்டட வேலைக்குப் பயன்படுத்தும் சாந்துகரண்டியால் தலையில் தாக்கியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவருடைய கம்மல் மற்றும் கழுத்துச் சங்கிலி உள்ளிட்ட 5 பவுன் நகைகளைக் கொள்ளையடித்தார்.
இதைத்தொடர்ந்து வீட்டின் பின்பகுதியில் தென்னை மரத்துக்கு தோண்டிய குழியில் சாந்தியின் உடலைப் போட்டுவிட்டு, பழைய தார்ப்பாய் போட்டு மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அந்த நகைகளை அருகில் உள்ள அடகுகடையில் அடகுவைத்து பணம் பெற்றுக்கொண்டு பூங்குழலி தலைமறைவானார். இதற்கிடையே வீட்டிலிருந்து வெளியே சென்ற சாந்தியை காணவில்லை என்று அவருடைய கணவர் புகார் செய்தார்.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து சாந்தியை தேடிவந்தனர். 2 நாட்கள் கழித்து ராமதுரையின் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வருவதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கிராம நிர்வாக அதிகாரி செல்வகணேஷ் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, கொலை செய்யப்பட்டது சாந்திதான் என்றும், அவரை திட்டமிட்டு தனது வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்தது பூங்குழலிதான் என்றும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தலைமறைவான பூங்குழலியை போலீசாரின் தீவிர தேடுதலில் கண்டறிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடந்துவந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜரானார். சாட்சி விசாரணைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று (08.11.2021) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றம் சாட்டப்பட்ட பூங்குழலிக்கு சாந்தியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், நகைகளைத் திருடிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதமும், சாட்சியங்களை அழிக்க முயன்ற குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.