
திருச்சி மாநகராட்சி மாமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், துணை மேயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் 2022 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம், நிதிநிலை அறிக்கையை வாசித்தார். இதில், பட்ஜெட்டில் மாநகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம், மேலப்புதூர் நடைமேம்பாலம், சூரிய ஒளி மூலம் மின் சக்தி தயாரித்தல், ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, மேம்படுத்துதல், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சீர்மிகு சாலைகள், நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டும் பணிகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முக்கியமாக திருச்சியில் உள்ள 65 வார்டுகளில் ரூபாய் 32.50 லட்சம் மதிப்பீட்டில் 128 புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டை கடந்த மாரிஸ் திரையரங்கம் ரயில்வே மேம்பாலம் தற்போதைய போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து அகலப்படுத்தப்படும். இந்த பணிக்காக ரூ.44 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதில் ரயில்வே பங்கு தொகையாக ரூ.22 கோடி, மீதமுள்ள தொகை ரூ.22 கோடி உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நடப்பாண்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேலப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்திற்கு அருகில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் அரசு மானியம் பெற்று நடைபாதை மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.