Skip to main content

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் திரும்பும் பயணிகள் ;அலைமோதும் கூட்டம்!!

Published on 13/01/2019 | Edited on 13/01/2019

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட பயணிகள் கூட்டத்தால் எழும்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.  

 

 Heavy crowd jam

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் ஏறுவதற்கு பயணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் முத்துநகர் விரைவு வண்டி, கன்னியாகுமரி விரைவு வண்டி, பொதிகை விரைவு வண்டி, நெல்லை விரைவு வண்டி உள்ளிட்ட ரயில்களில் எற கூட்டம் அலைமோதியது.  டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பயணிகள் இது போன்ற பண்டிகை நாட்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

 Heavy crowd jam

 

அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரயில்களில்  மட்டுமின்றி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையிலிருந்து சென்றுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக கடந்த இரண்டு நாட்களில் 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 Heavy crowd jam

 அவர் கூறியதாவது,

 ஆம்னி பேருந்துகள் 861 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இதுவரை அபராத  கட்டணமாக 18 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. வரி வசூல் 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செய்யப்பட்டிருக்கிறது. 11 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

 

 Heavy crowd jam

 

பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பொங்கலை முன்னிட்டு  சிறப்பு பேருந்துகள் விடப்படுவதால் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Case registered against ADMK M.R.Vijayabaskar for threatening election officer

கரூர் மாவட்டத்தில் தாந்தோனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் வினோத்குமார், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும் வீடியோ பதிவுகள் செய்யவும், VST Team 1 ன்  அதிகாரியாக கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால்  நியமனம் செய்யப்பட்டு  தேர்தல் பணியை  மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பணிக்காக  அரசு வாகனம்  வழங்கப்பட்டு, ஓட்டுநராக கங்காதரன், வீடியோ கிராஃபர் வீடியோ கேமராவுடன்  வழங்கப்பட்டு தேர்தல் பணியை செய்து வருகிறார்.

கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மார்ச் 31ஆம் தேதி அதிமுக கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் தங்கவேல் என்பவருக்கு தெருமுனை தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டி,  மண்மங்கலம் தாலுகா கரைப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கார்த்திக் என்பவர் அனுமதி கேட்டு மனு செய்திருந்த நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் மார்ச் 31ஆம் தேதி காலை முதல் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர்  தங்கவேல் என்பவருடன் அவரை ஆதரித்து,  முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர், விஜயபாஸ்கர்,  அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் , அதிமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன்  வேலாயுதம்பாளையம், கார்த்திக்  கரைப்பாளையம், ஜெகன் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்துடன் தெருமுனை பிரச்சாரம் செய்து வந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்படி, தெருமுனை பிரச்சாரத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமார் 10 கார்களுக்கு மேல் வேட்பாளருடன் தெருமுனை பிரச்சாரத்திற்கு அணிவகுத்து வந்தது. அப்போது நெரூர் அருகே உள்ள அரங்கநாதன்பேட்டை என்ற ஊரில் தெருமுனை பிரச்சாரத்தின்போது ஜெகன் என்பவரிடம் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும்படியும், வாகனங்கள் அணிவகுத்து வர தேர்தல் விதிமுறைப்படி அனுமதி இல்லை என்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் கூறியுள்ளார் .

அதனை தொடர்ந்து மதியம் 02.45 நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேல் தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கு பின்னால்  தேர்தல் கண்காணிப்பு குழுவுடன் அரசு வாகனத்தில் சென்றபோது, கரூர் மாவட்ட அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தின் முன்பு சட்டவிரோதமாக ஒன்று கூடி, வழிமறித்து தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்து வாகனத்திற்குள் இருந்த தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரி வினோத்குமாரை பார்த்து, " நீ ஓவரா பண்ற"," வண்டிய தேக்குயா பார்க்கலாம்", என்றும், "யோவ் என்றும் ஓவரா ரூல்ஸ் பேசுகிறாய்" என்றும், "கேஸ் தான போடுவ போட்டுக்கோ" என ஒருமையில் பேசியுள்ளனர். மேலும் ரமேஷ்குமார் என்பவர் வினோத் குமாரை ஆபாசமாக பேசியும் வாகனத்தை சூழ்ந்துகொண்டும் வீடியோ கிராஃபர் ஹரிஹரன் என்பவரை வீடியோ பதிவு செய்ய விடாமல் தடுத்தும்,  கொன்னுருவோம் என கொலை மிரட்டல் விடுத்ததோடு அனைவரும் வினோத்குமாரை  தாக்க முற்பட்டனர்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக தன்னை மீட்டதாக வினோத்குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் வினோத் குமார் அளித்த புகார் அடிப்படையில் , முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.