/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ch3_56.jpg)
லஞ்ச வழக்கில் கைதான மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசனுக்கு எதிரான ஆவணங்களைத் தாக்கல் செய்ய, சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-15- ஆம் ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயரைக் கூறி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் வருவதாக, ஒரு கோடியே 62 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர், சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கணேசன், கடந்த நவம்பர் 11- ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கணேசன், ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் அளித்த புகார்களில் கணேசனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் புகாரை புதுப்பிக்க முடியாது என்றும் கணேசன் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிய குற்றச்சாட்டு மட்டுமல்லாமல், அதிகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக பணி நியமன உத்தரவுகளை கணேசன் வழங்கியிருப்பதாகவும், இவரை போன்றவர்களால் பணம் கொடுத்த அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கணேசனுக்கு ஜாமீன் வழங்கலாமா என விளக்கம் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், குற்றத்திற்கு துணை போனவர்கள் என்ற அடிப்படையில் பணம் கொடுப்பவர்களையும் விசாரிக்க வேண்டுமெனவும், அவர்களை அப்பாவிகள் என்று சொல்லக்கூடாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)