தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
கரூர் மாவட்ட ஊராட்சி 8வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக - திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஊராட்சிகளுக்கான 8 பஞ்சாயத்து வாக்குப்பெட்டிகளைத் திட்டமிட்டபடி அந்தந்த மேஜையில் வைக்காமல், அதிகாரிகள் மாற்றி வைத்து எண்ணத் தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக - திமுகவினரிடையே வாக்குவாதத்துடன் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். வேட்பாளர் மற்றும் முதன்மை முகவருக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி வழங்கப்பட்டு மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த மோதலால் செய்தியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இரண்டுமணி நேர தாமதத்திற்குப் பின்னரே அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.