கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்களும், அதன் அருகிலேயே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அப்பகுதியில் கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டு பாலீஷ் போடும் பணிகள் நடந்து வருகிறது.
கிரானைட் கற்கள் பாலீஷ் போடும்போது அதிலிருந்து வெளிவரும் தூசித் துகள்கள் அருகில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் மக்களின் வீடுகளில் படிந்திருக்கிறது. மேலும், கற்களின் தூசி அவர்கள் உண்ணும் உணவிலும் படிந்துள்ளது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மக்கள் ஏதாவது தடுப்பை ஏற்படுத்தி இந்தப் பணிகளை மேற்கொள்ளலாமே எனக் கோரியுள்ளனர். ஆனால், அதனைச் சற்றும் ஏற்காத மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணிகளை அப்படியே தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் ஒன்றிய குழு தலைவர் அதிமுகவைச் சார்ந்த சோக்காடி ராஜனுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சோக்காடி ராஜன் வந்துள்ளார். அப்போது மீண்டும் அங்கு தகராறு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும், கற்கள் வீசிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு சோக்காடி ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த 500க்கும் மேற்பட்ட மாற்றுச் சமூகத்தினர், அங்கு வசிக்கும் மக்கள் மீது உருட்டுக்கட்டை மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், தலித் மக்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
அதன் பிறகு பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்த வி.சி.க. மாவட்டச் செயலாளர் மாதேஸ் ‘பட்டியலின மக்களின் பகுதிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட ஒன்றிய குழுத் தலைவர் சோக்காடி ராஜன் மற்றும் சோக்காடி பஞ்சாயத்து தலைவரின் கணவர் இராமலிங்கம் மற்றும் 100க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும். இல்லையேல் கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் இரண்டு தரப்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.