Skip to main content

போதையால் ஏற்பட்ட சம்பவம்... எஸ்.பி.யின் நடவடிக்கையால் கைதான வாலிபர்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Tragedy caused by intoxication, Youth arrested by SP's action

 

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கிவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (23.10.2021) இரவு ஒரு மர்ம நபர் செல்ஃபோனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவர் கூறும்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து நிமிடங்களில் வெடித்துவிடும் என்று மிரட்டல் குரலில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவுக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில், ஃபோனில் பேசிய மர்ம நபர் பேசும்போது போதையில் பேசியதாக சந்தேகமடைந்த போலீசார் அவரது செல்ஃபோன் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவந்தனர். அவர்களது விசாரணையில், திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அஜய் (23) என்பவர்தான் செல்ஃபோன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள்  பல காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் தெரியாமல் மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் அஜித் மீது வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.