
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் தலைமை காவலர் காளிதாஸ், இவர் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் நாட்றம்பள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று வழக்கம் போல பணியை முடித்துவிட்டு நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி புதூர் பகுதியை ஒட்டியுள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உறக்க கலக்கத்தில் எதிர்பாராத விதமாக சாலையில் இடது புறமாக உள்ள இரும்பு கம்பியாலான தடுப்பு வேலியில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் தலை மற்றும் முகம் தாடை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் தலைமை காவலர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது சடலத்தை வாணியம்பாடி நகர காவல் துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான வாணியம்பாடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஓய்வு இல்லாமல் பணிச்சுமை காரணத்தால் தூக்கக் கலக்கத்தில் விபத்தில் சிக்கினாரா? என சக காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சாலை விபதில்ப சிக்கி தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.