Skip to main content

மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Trade unions struggle  against various federal laws!

 

மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும், அவற்றை ரத்து செய்யக் கோரியும் அனைத்து தொழிற் சங்கங்கள், மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 26ஆம் தேதி நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூன்ஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 10 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

 

அந்த வகையில், ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நம்மிடம் பேசிய ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சின்னசாமி, “பல ஆண்டுகளாக இந்திய தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற சட்டங்களைப் பாஜக மோடி அரசு வந்தவுடன் 44 தொழிலாளர் சட்டங்களை வெறும் நான்கு தொகுப்புகளாக மாற்றிவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களோடு மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். தேசிய பணமாக்குதல் திட்டம் உள்ளிட்ட எந்தப் பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க கூடாது.

 

வருமானவரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் கரோனா கால நிவாரனமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500 வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதோடு, அதை நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும். ஏற்கனவே இயங்குகிற மாநில நலவாரியங்களை மத்திய அரசு சீர்குலைக்க கூடாது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து, அனைத்து பொருட்களின் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

 

விவசாயம், கல்வி, மருத்துவம், மற்றும் அத்தியாவசிய மக்கள் பயன்பாட்டுத் துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்தி பணக்காரர்கள், செல்வவளம் மிக்கவர்களிடம் இருந்து சொத்து வரி வசூலித்து, இதற்கான நிதியைத் திரட்டி, தேசிய பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டி புனர்நிர்மாணம் செய்திடல் வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதான் தேசிய அளவில் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து பாஜக அரசுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறோம்” என்றார்.

 

ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை என தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாட்கள் இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 


இந்தப் ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., எம்.எல்.எப்., எல்.டி.யூ.சி., டி.டி.எஸ்.எப்., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், திமுக விவசாய அணி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்