கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தொடர்ந்து அதிக நோயாளிகள் மாவட்டம் முழுவதிலிருந்தும் இந்த மருத்துவமனைக்கு வருவதால், அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் இருந்துவருகிறது. இந்த நிலையில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் வேண்டுகோளை ஏற்று பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிவருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் வர்த்தக சங்கம் சார்பில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும் வகையில் ரூ. 8 லட்சம் செலவில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 குடிநீர் மற்றும் சுடுநீர் இயந்திரங்கள், 50 ஆக்சிஜன் பேஸ் மாஸ்க், மற்றும் n95 மஸ்க் ஆகியவற்றை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் பொருளாளர் முரளிதரன், இணைப் பொருளாளர் அப்துல் ரியாஸ், செயற்குழு உறுப்பினர்கள் ஷன்முக விலாஸ் கணேஷ், சிவராமன்வீரப்பன், உறுப்பினர்கள் ரவிசங்கர், சாரோஸ் ராம்பிரசாத், சமூக ஆர்வலர் சித்து, மாநில மருந்தாளுநர் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழங்கினார்கள்.
சரியான நேரத்தில் நோயாளிகளைக் காப்பாற்ற இவற்றை வழங்கியதற்கு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில், சிதம்பரம் பகுதியில் சாரோஸ் என்ற நிறுவனத்தில் வீட்டுக்கு வீடு உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களின் (டெலிவரி பாய்ஸ்) ஒருவார ஊதியம் ரூ. 75 ஆயிரத்தை சேமித்து, அதில் ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியை வாங்கி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.