அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு எளிமையாக இருந்ததாகத் தேர்வர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 2, குரூப் 2ஏ அந்தஸ்தில் காலியாக உள்ள 5,529 பதவிகளுக்கான போட்டித்தேர்வு, சனிக்கிழமை (மே 21- ஆம் தேதி) நடந்தது. மாநிலம் முழுவதும், 4,012 மையங்களில் இத்தேர்வு நடந்தது. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தம் 161 மையங்களில், 63,437 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாலபாரதி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டார். முறைகேடுகளைத் தடுக்க 12 பறக்கும் படைகளும், 55 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
இத்தேர்வுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த பிப். 23- ஆம் தேதி வெளியிட்டது. மார்ச் 23- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை இல்லாத வகையில் 11.78 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆண்களை விட பெண்கள் 1.85 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போட்டித்தேர்வு எழுதிய இளைஞர்களிடம் நாம் பேசினோம். ''பொது அறிவு, பொதுத்தமிழ் என இரண்டு பகுதியாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் தலா 100 வினாக்கள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வினாவுக்கும் தலா 1.5 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
பொதுத்தமிழ் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன. போட்டித் தேர்வுக்கு நன்கு தயாராகி வந்தவர்களால் பொதுத்தமிழில் நிச்சயம் 90 வினாக்களுக்கு மேல் சரியான விடை அளிக்க முடியும். அதேநேரம், பொது அறிவு பாடப்பகுதியில் கணித பகுதியில் கேட்கப்பட்ட 25 வினாக்களில் கிட்டத்தட்ட 22 வினாக்கள் மிக எளிமையாக இருந்தன.
வரலாற்றுப் பகுதியில் இந்தமுறை தென்னிந்திய வரலாற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. 'கரண்ட் அஃபையர்ஸ்' பிரிவில், பொருளாதாரம் சார்ந்த வினாக்கள், பொது அறிவியல் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தன. கரோனா காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. உதாரணமாக, 'கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021- ல் மாநில உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் வரை மேம்படுத்தப்பட்டது?' என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது.
அதேபோல, '2022-23 நிதிநிலை அறிக்கையில் தோராய மதிப்பில் பற்றுச்சீட்டு தொகையை இறங்கு வரிசையில் எழுதும்படி,' கேட்டிருந்தனர். இதுபோன்ற வினாக்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இனி, நிதிநிலை அறிக்கையை பற்றியும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று புரிய வைத்துள்ளது.
முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு எதற்காக அமைக்கப்பட்டது என்ற ஒரு வினாவும் சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து கேட்கப்பட்டு இருந்தது. விளையாட்டுத்துறைக்கு இந்தமுறை அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை. பொது அறிவு பிரிவில் உள்ள வினாக்கள் அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி. குறிப்பிட்டுள்ள பாடப்பகுதிகளில் இருந்துதான் கேட்கப்பட்டு இருந்தன. என்றாலும், கணிதம் தவிர பிற பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்களில் சில பட்டப்படிப்பு பாடப்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டு இருந்தன,'' என்கிறார்கள் தேர்வர்கள்.
மற்றொரு இளைஞரோ, ''பொது அறிவு பகுதியில் சில வினாக்களுக்கு நேரடியாக சரியான விடை தெரியாவிட்டாலும், பொருந்தாத விடைகளை தெரிந்து இருந்தால், அதை வைத்து சரியான விடையை எழுதும் வகையிலும் நுட்பமாக கேட்கப்பட்டு இருந்தது,'' என்றார். மொத்தத்தில், இந்த தேர்வு மிக எளிமை அல்லது மிக கடினம் என்றில்லாமல் 'ஓரளவு எளிமை' என்ற அளவில் இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில், வழக்கமாக ஒரு வினாவுக்கு ஏ, பி, சி, டி என நான்கு விடை வாய்ப்புகள் மட்டும்தான் கொடுக்கப்படும். இந்தமுறை, முதன்முதலாக 'விடை தெரியவில்லை' என்ற ஐந்தாவது வாய்ப்பும் வழங்கப்பட்டு இருந்தது. ஓஎம்ஆர் தாளில் 200 வினாக்களுக்கும் விடை அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், எந்த கட்டமும் நிரப்பப்படாமல் விடுபடக்கூடாது என்பதற்காகவும் 'விடை தெரியவில்லை' என்ற கூடுதல் அம்சமும் சேர்க்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் சொன்னார்கள்.
மேலும், ஓஎம்ஆர் தாளில் ஷேட் கொடுக்கப்படாமல் விடப்படும்போது அது முறைகேட்டிற்கும் வழிவகுக்கும். அதனால் இந்த புதிய அம்சம் இனி வரும் காலங்களிலும் இடம்பெறும் என்றனர். இத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.