சென்னை நேரு ஸ்டேடியம், திருச்சி, மதுரை, சேலம், கோவை, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.
அரசிடம் ரெம்டெசிவிரைப் பெறும் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றுவந்ததால் விற்பனை நிறுத்தப்பட்டதாக அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ரெம்டெசிவிர் விற்கப்படாது என தமிழக அரசு அறிவித்த நிலையில், மருந்து வாங்க சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரெம்டெசிவிர் வாங்க நேற்று (16/05/2021) இரவு முதல் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
விற்பனை நிறுத்தப்பட்டதால் ரெம்டெசிவிர் வாங்க யாரும் நேரு ஸ்டேடியத்திற்கு வர வேண்டாம்; ரெம்டெசிவிர் தேவைப்படுவோர், நோயாளிகள் சிகிச்சைப் பெறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுகலாம் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தனியார் மருத்துவமனைகளிலேயே நாளை (18/05/2021) ரெம்டெசிவிர் மருந்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.