தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவை முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று (03/05/2021) அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களின் பணி நிரந்தரமாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பில், "தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 - 2016 ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. வரும் மே 10ஆம் தேதிக்கு முன்னதாக 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும். பின்னர், 1,212 பேரும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 செவிலியர்களுக்கான ஊதியம் ரூபாய் 15,000இல் இருந்து ரூபாய் 40,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,212 செவிலியர்களுக்கான பணி ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில், தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.